'க்ரஷ்' வெப்தொடரில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீராங்கனை.. உடன் நடிப்பவர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

ஹாலிவுட்டில் தயாராக இருக்கும் ’க்ரஷ்’ என்ற சர்வதேச வெப் தொடரில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிரபல இந்திய நடிகையும் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சில வீரர், வீராங்கனைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி தென் கொரியாவை சேர்ந்த துப்பாக்கி சூடு வீராங்கனை கிம் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்றவர், தற்போது நடிகையாகவும் உருவெடுத்துள்ளார்.

’க்ரஷ்’ வெப் தொடரில் கிம் கொலையாளியாக நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகை அனுஷ்கா சென் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. கிம் மற்றும் அனுஷ்கா இருவரும் இந்த படத்தில் இரட்டை கொலையாளிகளாக சிறப்பாக நடிப்பார்கள் என்று படத்தை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

திரைப்படங்களில் நடிப்பது பற்றி கிம் கூறியபோது, நான் திரைப்படங்களில் நடித்தாலும், எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவது தான் முதன்மையான இலக்கு. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி, அதன் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடி, புதிய உயரத்தை எட்டுவேன், என கிம் தெரிவித்துள்ளார்.