இனி பழைய வாகனங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?
- IndiaGlitz, [Thursday,February 04 2021]
மத்திய அமைச்சர் நிர்மலாக சீதாராமன் வெளியிட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு பழைய வாகனங்களுக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்றார். இதன்படி பழைய வாகனங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் பழைய வாகனங்களை முற்றிலும் ஒழித்து விடலாம் என்றும் அதோடு கொரோனாவால் விற்பனை இழந்து போன மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்து வருகின்றனர். ஆனால் பழைய வாகனங்களை வைத்து இருக்கும் தனி நபர் மற்றும் தொழில் முறை வணிகர்களுக்கு இது பேரிடியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனிமேல் மோட்டார் வகானச் சட்டத்தின்படி 8 ஆண்டுகள் கடந்த வாகனங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் தகுதிச்சான்றிதழ் பெற்று பயன்படுத்தப்பட வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகனப் புதுப்பிப்பு சான்றிதழ் பெற வேண்டும். புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும்.
இதன்படி கார்களுக்கு 200 ரூபாயாக இருந்த கட்டணம் இனி 7,500 ஆகவும் கனரக வானங்களுக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் இனி 12,500 ரூபாயாகவும் உயர வாய்ப்பு இருக்கிறது. அதோடு தனிநபர் பயன்படுத்தும் வாகனங்கள் 20 ஆண்டுகளை கடந்து இருந்தால் 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும் என்றும் இருசக்கர வாகனங்களுக்கு 300 ரூபாயாக இருந்த கட்டணம் இனி 1000 ரூபாயாகவும் கார்களுக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் இனி 5,000 ரூபாயாகவும் உயரலாம் எனக் கூறப்படுகிறது.
இது தவிர சாலை வரியுடன் வசூலிக்கப்படும் பசுமைக்கட்டணமும் இனி 10 முதல் 25% வரை உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பழைய வாகனங்களை பயன்படுத்தும் தனிநபர் மற்றும் தொழில் முறை வணிகர்கள் கடும் அவதிக்கு உள்ளாக நேரிடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர்.