சென்னை அருகே மூதாட்டி, தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பரிதாபம்!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி ஒருவர் தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இரூந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமுல்லைவாயில் அடுத்த அயப்பாக்கத்தில் வசித்து வருபவர் செல்வம். அவரது மனைவி சுமதி. இவர்களுடன் தாயார் மேனகாவும் வசித்து வந்துள்ளார். மேனகாவுக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காகத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டுவரும் அவர் நேற்றும் மாத்திரை எடுத்துக் கொள்வதற்காக அருகில் உள்ள தண்ணீர் பாட்டிலைத் தேடியுள்ளார். அப்போது தவறுதலாக ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்து இருக்கிறார். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளார்.

இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மேனகாவை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேனகா உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா நேரத்தில் வீட்டின் தூய்மைக்காகவும் மேற்பரப்பு தூய்மைக்காகவும் பெரும்பாலானோர் ஆசிட் மற்றும் கிருமிநாசினி பொருட்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற பொருட்களை பயன்படுத்தும்போது ஏற்படும் அஜாக்கிரதையினால் உயிரிழப்புகள் நிகழ்வது தற்போது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.