நம்பவே முடியாத புது தொழில்நுட்பத்துடன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? முன்பதிவு செய்வது எப்படி?
- IndiaGlitz, [Friday,July 16 2021]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் தொழில்நுட்பத்திற்கு மாறி இருக்கிறது. இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் இருசக்கர ஸ்கூட்டருக்கான முன்பதிவை இணையத்தில் துவங்கி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய தொழிற்சாலையைத் துவங்கி இருக்கும் ஓலா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடி வாகனங்களை உருவாக்கிடவும் அந்த நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.
ஓலா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெறும் 18 நிமிடத்திற்குள் 50% வரை சார்ஜ் செய்து விடலாம் என்றும் இந்த 50% மின்சாரத்தை வைத்துக்கொண்டு 75 கிமீ வரை பயணம் செய்ய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது கிட்டத்தட்ட இந்த வண்டியில் 150கிமீ வரை பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதிவேகம் மற்றும் பூட் ஸ்பேஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த ஸ்கூட்டர்களின் விலை நிலவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வாகனங்களுக்கான முன்பதிவு இப்போதே துவங்கி இருக்கிறது. வெறும் ரூ.499 செலுத்தி இந்த வாகனங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த முன்பதிவு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் மின்சாரத்தில் இயங்கும் புது ஓலா எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் https://olaelectric.com/ எனும் இணையத்தளத்திற்கு சென்று தங்களது வாகனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விரைவில் டெலிவரி செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.