ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…
- IndiaGlitz, [Friday,July 23 2021]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் கடும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனால் ரூ.499 கொடுத்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியா முழுக்க முன்பதிவு செய்து கொள்ளலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த முன்பணம் திரும்ப தரப்படும் என்ற உத்தரவாதத்தையும் அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
முதற்கட்டமாக 1 லட்சம் வாகனங்கள் முன்பதிவு செய்யப்படும் நிலையில் வாகனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கி வெறும் 24 மணிநேரத்தில் 1 லட்சத்தைத் தாண்டி முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் விரைவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் ஓலா ஸ்கூட்டர்களின் நிறம் பற்றி வாடிக்கையாளர்களிடம் அந்நிறுவனம் கருத்துக்கணிப்பு கேட்டு இருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு அடிப்படையில் அந்நிறுவனம் 10 வண்ணங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு ஓலா எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு டீலர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் டீலர் சார்ஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு எந்த அனாவசிய செலவுகளும் இருக்காது. ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேடியாக டெலிவரி செய்யப்படும் வகையில் அந்நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் டெலிவரி டீலர்ஷிப் நெட்வொர்க்கிங் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் வாடிக்கையாளர்கள் கடன் விவரங்கள், விண்ணப்ப விவரங்கள் போன்றவற்றை ஒப்படைக்கும் வகையில் அந்நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் டெலிவரி மையங்களை உருவாக்கி உள்ளது. இதனால் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே தங்களது வண்டிகளை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். கடன் வாங்கும் பட்சத்தில் தேவையான ஆவணங்களை லாஜிஸ்டிக்ஸ் அலுவலகர்களிடம் அதற்கான ஆவணங்களை ஒப்படைத்து விடலாம்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விலையை அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை. இந்நிலையில் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ வகை ஸ்கூட்டர்களின் விலை ரூ.80,000 முதல் 1.1லட்சம் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெறும் 18 நிமிடத்தில் 50% சார்ஜ் ஆகிவிடும் என்றும் அதைவைத்து 75 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும் 100% சார்ஜ் செய்தால் 150கிலோமீட்டர் பயணம் செய்யலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் 20 லட்சம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அடுத்த வருடத்தின் இறுதிக்குள் 2 கோடி வாகனங்கள் உற்பத்திச் செய்யப்பட இருக்கிறது என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.