சென்னை ஜெமினி மேம்பாலத்தில் ஓடிய பாமாயில் ஆறு: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Sunday,April 12 2020]
சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலம் அருகே திடீரென பாமாயில் ஆறு ஓடியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.
சென்னையில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்திற்கு பாமாயில் ஏற்றி வந்த லாரி ஒன்று ஜெமினி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், ஜெமினி மேம்பாலம் முடியும் இடத்தில் அந்த லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனை அடுத்து அந்த லாரியில் இருந்த 2000 லிட்டர் பாமாயில் சாலையில் ஆறுபோல் ஓடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து, லாரி தீப்பிடித்துவிடாமல் இருக்க முதலில் லாரியை சுற்றி தண்ணீரை பீச்சி அடித்தனர். அதன் பின்னர் டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது ஜெமினி மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் இதனால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஜெமினி மேம்பாலத்தில் இந்த விபத்து நேர்ந்தபோது ஒரு வாகனம் கூட செல்லாததால் வேறு எந்த அசம்பாவிதமும் இந்த விபத்தால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.