ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். இன்று காலை சற்று முன் அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் இருந்து வரும் அசாதாராண நிலை மற்றும் போராட்டம் குறித்து விளக்கியுள்ளார்.
மேலும் பிரதமரிடம் முதல்வர் ஓபிஎஸ் மூன்று கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
1. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்
2. தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
3. வர்தா புயல் நிவாரணம் விரைவில் வழங்க வேண்டும்
இந்த சந்திப்பு குறித்து பிரதமரிடன் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் கலாச்சார விழாவான ஜல்லிக்கட்டு பாராட்டத்தக்கது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.
தமிழகத்தின் வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் மீண்டும் தமிழகம் வரும். வறட்சியை எதிர்கொள்ள தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி.