வயலில் இறங்கி உழவுத்தொழில் செய்யும் எம்எல்ஏ!!! குவியும் பாராட்டுகள்!!!

  • IndiaGlitz, [Thursday,August 20 2020]

 

ஒடிசா மாநிலத்தின் நபராங்கபூர் மாவட்டத்தின் தபுகாவூன் தொகுதி எம்எல்ஏ வான மனோகர் ராந்தாரி உழவுத்தொழில் செய்வது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. மனோகர் ராந்தாரி இதுகுறித்து கூறும்போது என்னுடைய அடிப்படைத் தொழிலே உழவுதான். எனக்கு விவசாயம் மிகவும் பிடித்தமான விஷயம். இக்கால இளைஞர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களின் உணவு பஞ்சத்தை உழவுத்தொழிலால்தான் போக்க முடியும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால் அம்மாநில விவசாயிகள் பரபரப்பாக உழவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மனோகர் ராந்தாரியும் தன்னுடைய 25 ஏக்கர் சொந்த நிலத்தில் தானே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய மனைவி அரசாங்க அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரும் எம்எல்ஏவுடன் உழவுத் தொழிலில் ஈடுபடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 5 மணிக்கு எம்எல்ஏவும் அவருடைய மனைவியும் தோட்டத்திற்குச் சென்று வேலைப்பார்த்து ஒன்றாக பணயாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

வயலில் இறங்கி வேலைப்பார்க்கும் எம்எல்ஏவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறார். அதேபோல ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கும் மனோகர் ராந்தாரிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறார். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று காந்தியடிகள் முன்பே குறிப்பிட்டு காட்டியிருந்தார். அந்தப் பொன்மொழிகளை உண்மையாக்கும் விதமாகத் தற்போது பல தலைவர்களும் விவசாயத்தின்மீது ஆர்வம் செலுத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.