ஒடிசா: கல்லூரி மாணவர்களுக்கு அடித்தது லாட்டரி!!!
- IndiaGlitz, [Friday,June 12 2020]
ஒடிசா மாநிலத்தில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு ரத்துச் செய்யப்படுவதாக அம்மாநில உயர்க் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நெருக்கடியில் இதுவரை பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகம், தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நடைமுறை அனைவராலும் வரவேற்கப் பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற ஆர்வம் எழுந்திருந்தது.
இந்நிலையில் ஒடிசா மாநித்தில் உயர்க் கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “கொரோனா நெருக்கடி காரணமாக மாநிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. UGC அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதாமலே தற்போது வேலை மற்றும் உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதுபோன்ற நடைமுறை தமிழகத்திலும் தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்திருக்கிறது.