தாய்ப்பால் கொடுக்கும் அட்டைப்பட வழக்கில் கேரள நீதிமன்றத்தின் முதிர்ச்சியான தீர்ப்பு
- IndiaGlitz, [Saturday,June 23 2018]
பிரபல மலையாள வார இதழ் ஒன்றின் அட்டைப் படத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு அட்டைப்படம் வெளிவந்தது. இந்த அட்டைப்படத்தின் கீழே 'உற்று பார்க்காதீர்கள்; நாங்கள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமும் சர்ச்சையும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த அட்டைப்படத்திற்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கறிஞர் வினோத் மேத்யூ என்பவர் தொடரந்த இந்த வழக்கில் 'இதுவொரு மோசமான விளம்பரம்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த அந்த இதழின் ஆசிரியர், 'பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, அட்டைப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை அச்சிட்டிருந்ததாக தெரிவித்தார். மேலும் ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்ததாகவும், அந்த பதிவினை பலர் கிண்டல் செய்திருந்ததால் தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தங்கள் வார இதழ் செயல்பட்டதாகவும் அதன் ஆசிரியர் விளக்கமளித்திருந்தார்
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த கேரள ஐகோர்ட் நீதிபதி, ' ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது. எனவே தாய்ப்பால் கொடுப்பது குறித்த அட்டைப்பட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தார். நீதிபதியின் இந்த முதிர்ச்சியான தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது