கொரோனா நோயில் உடல் பருமனாக இருப்பதும் பெரிய ஆபத்தா??? மருத்துவக் காரணம் என்ன???

  • IndiaGlitz, [Wednesday,May 13 2020]

 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான ஆபத்துக் காரணிகளில் வயதை அடுத்து உடல் பருமனும் முக்கிய காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இருதயக் கோளாறு, நீரழிவு, சுவாசக் கோளாறு, புகைப்பழக்கம் போன்ற பாதிப்புக்கொண்ட நபர்களுக்கு கொரோனா  நோய்த் தொற்று ஏற்படும் போது அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர். மற்ற கொரோனா நோயாளிகளை விட இந்த மூன்று நோயால் ஏற்கனவே பாதிக்கப் பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்த நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. மேலும் இறப்பவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களை அடுத்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

இந்த வரிசையில் புதிதாக உடல் பருமன் உள்ளவர்களையும் மருத்துவர்கள் சேர்த்திருக்கின்றனர். அதாவது உடல் பருமன் கொண்டவர்களை கொரோனா நோய்த்தொற்றுத் தாக்கும் போது மற்ற கொரோனா நோயாளிகளைவிட இவர்கள் அதிகம் பாதிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. இதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது உடல் பருமனாக இருப்பவர்களை கொரோனா வைரஸ் கிருமி எளிதாகப் பற்றிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கருத்துத்தான் தற்போது உலகில் பெரும்பாலானவர்களை பீதியடையச் செய்திருக்கிறது. ஏனெனில் WHO வின் கருத்துப்படி 2016 இல் மட்டும் 1.6 பில்லியன் வயதானவர்கள் அதிக எடையைக் கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளம் வயதையுடைய 650 மில்லியன் மக்கள் பருமனாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உடல் பருமன் என்பது சாதாரண நாட்களிலேயே அதிக சிக்கல் வாய்ந்த நோயாக இருந்து வருகிறது. அதிலும் வேறு வேறு காரணங்களுக்காக உடல் பருமன் அதிகமாகி மனிதர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படியிருக்கும்போது அனைத்து உடல் பருமன் கொண்டவர்களையும் ஒரே கோணத்தில் வைத்து பார்ப்பதும் தவறு என விஞ்ஞானிகள் விமர்சித்து வருகின்றனர். உடல் பருமன் கொண்ட மனிதர்களுக்கு இயல்பிலேயே அதிகளவு ஆக்சிஜன் தேவைப்படும், மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றவர்களைவிட வலுவிழந்து காணப்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே கொரோனா நோய்த்தொற்று அவர்களை எளிதாகப் பற்றிக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தை மருத்துவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.  

இன்ப்ளூயன்ஸா H1N1 நோய்த்தொற்றின்போது அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தனர் என தரவுகள் கூறுகின்றன. மேலும், உடல் பருமன் கொண்டவர்களை நிமோனியா போன்ற தொற்றுகள் எளிதாக பற்றிக் கொள்கிறது. இந்த காரணங்களாலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு அவர்களை பிடித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் பருமன் என்பது (உடல் நிறை குறியீடு) உயரத்திற்கும் எடைக்கும் உள்ள அளவு 25 இல் இருந்து 30 அளவைத் தாண்டும் போது இந்த பிரச்சனைகள் வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பாதிப்புகளால் தற்போது அமெரிக்கா, இத்தாலி, சீனாவில் பல கொரோனா நோயாளிகள் அதிக பாதிப்பை அனுபவித்த வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உடல் நிறை குறியீடு (BMI) அதிகமாக இருக்கும் நபர்களின் திசு செல்கள் ஏற்கனவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் செயலிழந்து காணப்படும். மேலும் கொரோனா நோய்த்தொற்று அவர்களைத் தாக்கும் போது அவர்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகள் தோன்றுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலமும் குறைந்த திறனைக் கொண்டிருப்பதால் கொரோனா நோயை எதிர்த்து போராடுவதற்கான ஆற்றலை இல்லாமல் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட உடல் பருமன் கொண்ட 4 ஆயிரம் நோயாளிகளுக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து இருக்கிறது. சீனாவில் 383 அதிகமான பருமன் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு தீவிரச் சிகிச்சை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இங்கிலாந்தில் 17 ஆயிரம் கொரோனா நோயாளிகளில் உடல் பருமன் இல்லாதவர்களை விட உடல்பருமன் கொண்டவர்கள் 33 விழுக்காடு அதிகம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு மற்றவர்களைவிட 73 விழுக்காடு தீவிரச் சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல பிரிட்டன் தேசிய சுகாதாரத் சேவை மையத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் உடல் பருமன் கொண்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உடல் பருமன் கொண்டவர்களுக்கு அடிப்படையிலேயே கொழுப்பு அதிகமாக இருக்கும். அதிகபடியான கொழுப்பு நுரையீரல் செயல்பாட்டை சிதைக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இரத்ததிற்குக் கொண்டு செல்லப்படும் ஆக்சிஜன் அளவும் குறைவாக இருக்கிறது. இந்தத் தொடர் பாதிப்பினால் இதயக் கோளாறுகள் கூடவே ஏற்படுகின்றன. தற்போது கொரோனா நேரத்திலும் இதே பிரச்சனைதான். ஆக்சிஜன் பற்றாக் குறையுள்ள இவர்களுக்கு கொரோனா பாதிப்பினால் மேலும் சிக்கல் ஏற்படுகிறது. அதோடு கொரோனாவிற்கு எதிராக அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் சுரக்கும் புரதங்கள் நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி சைட்டோகைன் பாதிப்புகளை கொண்டுவந்து விடுகிறது.

கொரோனா வைரஸ் மனித உடலிலுள்ள ACE2 புரதத்தைப் பற்றிக்கொள்ளும் திறனை கொண்டது என்பதை முன்னதாக விஞ்ஞானிகள் தெளிவு படுத்தினர். இந்த  ACE2 புரதம்  மற்றவர்களை விட உடல் பருமன் கொண்டவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதும் முக்கியமான ஆபத்தாக கருதப்படுகிறது. அதாவது, அடிபோஸ் திசு அல்லது கொழுப்பு திசுக்களில் இந்த மூலக்கூறு அதிகளவு காணப்படும். உடல் பருமன் அதிகம் கொண்ட நபர்களின் தோல் பகுதிகளுக்கு கீழே இந்த கொழுப்பு திசுக்கள் அதிகளவு இருக்கிறது. இயல்பாகவே இந்த கொழுப்பு திசுக்களை மேக்ரோபேஸ்பரவலுக்கு இவை கட்டாயப் படுத்துக்கின்றன. இத்தகைய பாதிப்புகளினால் உடல் பருமன் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகிறது.

கொரோனா பாதிப்பில் இருதய நோய், முதிர்ந்த வயது, ஆஸ்துமா போன்ற சுவாசப் பாதிப்பு, நீரிழவு காரணிகளை போல உடல் பருமனும் ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாக உணரப்படுகிறது என்பதை பல விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். சிகிச்சையின்போதும் பெரும்பாலும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு தீவிரச் சிகிச்சை அத்யாவசியமாகிறது. மருத்துவக் கருவிகள் மற்றும் படுக்கை, கவனிப்பு போன்ற எல்லா காரணிகளும் இவர்களுக்கு இரட்டிப்பு தேவையாக இருக்கிறது எனத் தற்போது மருத்துவ உலகம் கவலைத் தெரிவித்து வருகிறது.