துரைமுருகனை சிரிக்க வைத்த ஜெயலலிதா- ஓபிஎஸ் சொல்லும் சுவாரஸ்யம்
- IndiaGlitz, [Tuesday,February 28 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அவரை சசிகலா ராஜினாமா செய்ய வற்புறுத்தினார் என்பது தெரிந்ததே. இதற்கு காரணமாக சசிகலா தரப்பில் கூறப்பட்டபோது, 'எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்ததாகவும், இருவருக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவருடன் சிரித்து பேசியதால்தான் சசிகலாவின் கோபத்திற்கு காரணமா? என ஓபிஎஸ் அவர்களிடன் சமீபத்தில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஓபிஎஸ் அவர்கள் பதிலளித்தபோது, 'ஜெயலலிதாவின் கேள்வி ஒன்றுக்கு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்த துரைமுருகன் அவர்கள் சிரித்த ஒரு சம்பவத்தை ஓபிஎஸ் நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:
2001 - 2006ல் சட்டப்பேரவையில் முதல் வரிசையில் நான், ஜெயலலிதா அமர்ந்த வரிசையில் அமர்ந்திருந்தேன். எதிரில் முதல் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் அமர்ந்திருப்பார்கள். அன்றைய தினம் துரைமுருகன் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தார். ஜெயலலிதா பார்த்தபோது துரைமுருகன் சிரித்தார்
அப்போது ஜெயலலிதா, 'துரைமுருகன்..என்று அழைத்து ''நீங்கள் நடிப்புத்துறைக்கு போயிருந்தா மிகப்பெரிய நடிகரா ஆகியிருப்பீங்க'' என்று கூறினார். இதைக்கேட்ட துரைமுருகன் கலகலவென சிரித்துவிட்டு, 'அம்மா நாங்க என்ன கேள்வி கேட்டாலும் உடனே நீங்க பிங்கர் பாயிண்ட்ல வைச்சு பதில் சொல்றீங்கம்மா. நிறைய படிக்கிறீங்கம்மா' என்று கேட்டார். இதையெல்லாம் நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பினார்.