சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா? தினகரன் மத்தியஸ்தமா?
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணி அமைக்கப் போவதாக சில வதந்தி உலா வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இதற்கு அமமுக கட்சியின் ஒருங்கிணப்பாளர் தினகரன் அவர்கள் மத்தியஸ்தம் செய்வார் என்றும் கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் திருப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. அதன் முற்கட்டமாக முதல்வர் பொறுப்பு வகித்த ஓபிஎஸ் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கப்பட்டார். இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி சசிகலா முதல்வராகப் பதவி வகிப்பார் எனக் கருதப்பட்டது.
இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி அவர் சிறை செல்ல வேண்டியதாயிற்று. இந்நிலையில் யார் முதல்வர் என்ற பெரும் விவாதம் அந்தக் கட்சிக்குள்ளேயே பெரும் பூகம்பமாக வெடிக்க துவங்கியது. அப்போது எண்ட்ரி கொடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்ற அவர் ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தை மிகத் திறமையாகக் கையாண்டு பின்னர் அவரையும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டார்.
இப்படித்தான் திருமதி சசிகலாவும் இணைத்துக் கொள்ளப்படுவார் எனக் கருதப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து திருமதி சசிகலா வெளிவந்த போது அதிமுக கட்சி அவரை வரவேற்கவில்லை. இதனால் சசிகலாவை நம்பி இருக்கும் அமமுகவின் நிலை என்னவாகும்? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்த நிலையில் ஒருவேளை அமமுகவிற்கு ஆதரவுக் கொடுத்து தமிழகத்தில் புதிய புரட்சியை சசிகலா ஏற்படுத்துவாரா? என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்து வந்தது. ஆனால் அத்தனை எதிர்ப்பார்ப்பையும் களைத்துப்போட்ட சசிகலா திடீரென்று அரசியலைவிட்டே ஒதுங்கி விட்டார்.
மேலும் அவர் அரசியலைவிட்டுச் செல்லும்போது “ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய அவரிடமும் இறைவனிடமும் பிரார்த்தனை செய்வேன்” எனக் கூறி இருந்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருந்த அந்தச் சூழலில் தன்னால் கட்சிக்கு எந்த இழப்பும் ஏற்படக்கூடாது எனக் கருதியே சசிகலா இப்படிச் சொன்னதாகவும் சில விமர்சனங்கள் உலா வந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் சசிகலா அரசியலுக்கு வருவார், அதோடு எடப்பாடி பழனிசாமியால் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் சசிகலாவுடன் புதிய கூட்டணி வைக்கப்போகிறார் போன்ற கருத்துகள் தற்போது தமிழகத்தில் மீண்டும் உலா வரத் தொடங்கி இருக்கிறது. மேலும் தினகரனும் இதில் முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முயற்சிக்காக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தினகரன் மகளின் திருமணத்திற்கு சசிகலா மற்றும் ஓபிஎஸ்க்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவாதிக்கும் சில அரசியல் நிர்வாகிகள் இப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கூறி வருகின்றனர். காரணம் அதிமுகவில் வலுப்பெற்று விட்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கட்சிக்குள் ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டிவருவதாகச் சில விமர்சனங்கள் வெளிவருகின்றன. இந்தச் சூழலில் சசிகலா-ஓபிஎஸ்-தினகரன் எனும் புதிய கூட்டணி அமைய இருப்பதாக வரும் தகவல்கள் தற்போது மீண்டும் விவாதத்தை கிளப்பி இருக்கின்றன.