கலர், எடைக்கு ஏற்ப விலை: ஜோராக நடக்கும் குழந்தை வியாபாரம்
- IndiaGlitz, [Thursday,April 25 2019]
கலர், எடை பார்த்து குழந்தைகளை வாங்கி, விற்று வரும் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகள் சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க வேண்டுமானால் பல கட்டுப்பாடுகள் இருப்பதை அறிந்து சட்டவிரோதமாக இடைத்தரகர்கள் மூலம் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்க்கின்றனர். இதனை பயன்படுத்தி கடந்த 30 வருடங்களாக ஜோராக குழந்தை வியாபாரம் செய்து வரும் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா என்பவர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
நர்ஸ் அமுதா நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். பணி ஓய்வுக்கு முன்னரே விருப்ப ஓய்வு பெற்ற இவர் பல தொண்டு நிறுவனங்களிடம் நட்பு வைத்து அவர்கள் மூலம் குழந்தைகளை வாங்கியும் விற்றும் வருகிறாராம். தவறான முறையில் பிறந்த குழந்தை, ஏழை வீட்டில் பிறந்த குழந்தைகளை இவர் ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து வாங்கி, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் லட்சக்கணக்கில் விற்பனை செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வாங்கிக்கொண்டு தத்தெடுத்தவர் பெயரில் பிறப்புச்சான்றிதழும் இவரே வாங்கி கொடுத்துவிடுவாராம். ஆண் குழந்தை என்றால் ஒரு விலை, பெண் குழந்தை என்றால் ஒரு விலை, கலராக இருந்தால் ஒரு விலை, கலர் கொஞ்சம் கம்மியாக இருந்தால் ஒரு விலை என கிட்டத்தட்ட ஒரு குழந்தை மெனுவே இவர் வைத்துள்ளதாக தெரிகிறது.
இவர் ஒரு தம்பதியிடம் சமீபத்தில் குழந்தை ஒன்றை விற்க விலைபேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் குழந்தையை விற்ற தம்பதியினர்களும், குழந்தையை வாங்கிய தம்பதிகள் என யாரும் இவர் மீது புகார் கொடுக்காததால் சட்டப்படி இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து தாமாகவே முன்வந்து விசாரணை செய்தால் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.