இந்தியாவையே உலுக்கிய ஆரூஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை

  • IndiaGlitz, [Thursday,October 12 2017]

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட அச்சிறுமியின் பெற்றோர்களான  ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் தம்பதியருக்கு சி.பி.ஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் ராஜேஷ் - நூபுர் தம்பதியர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் ஆரூஷியின் பெற்றோர் குற்றவாளிகள் அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியை அடுத்த நொய்டாவில், கடந்த 2008ஆம் ஆண்டு பல் டாக்டர் தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது ஆருஷியும், 45 வயதான வேலைக்காரர் ஹேம்ராஜும் படுகொலை செய்யப்பட்டனர். ஆருஷி அவரது படுக்கையறையில் பிணமாகக் கிடந்த நிலையில், ஹேம்ராஜ் மொட்டை மாடியிலுள்ள தண்ணீர் டேங் அருகே கழுத்து அறுபட்டு கொலையுண்டு கிடந்தார்.

இந்த இரண்டு கொலைகளையும் ராஜேஷ், நூபுர் தம்பதியினர்தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பில் ராஜேஷ், நூபுர் தம்பதிகள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியது

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சற்று முன்னர் ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.