டிக்டாக்,வாட்ஸ்அப் கட்டுப்பாடுகள்,என் வளர்ச்சியை தடுக்கவே...! சீமான் காரசாரப் பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,March 22 2021]

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தன்னுடைய வளர்ச்சியை குறைப்பதற்காகவே, இந்தியாவில் வாட்ஸ்அப் கட்டுப்பாடுகள் மற்றும் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது என அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். சீமானின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க,அரசியல் திருவிழா சூடுபிடித்துள்ளது என சொல்லலாம். அதிமுக,திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு மத்தியில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. பிற கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், நாம் தமிழர் மட்டும், கூட்டணி வைக்காமல் தனியாக களம் இறங்குகிறது. கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் தனது கட்சிசார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒவ்வொரு தொகுதிக்கும் தீயாய் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான்.இவர் பேசும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் சீமான் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவுகள் வலுவாக இருந்துவருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான்

என்னை டிக்டாக் செயலியில் சுமார் 7.5 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பாலோ செய்து வந்தனர். இதனாலேயே மத்திய அரசு பிற காரணங்களை கூறி டிக்டாக் செயலியை தடை விதித்தது. அதே போல் வாட்ஸ்அப் செயலியிலும் 5 பேருக்கு மேல் செய்தியை பார்வேர்டு செய்ய முடியாத கட்டுப்பாடும் வந்துள்ளது . தனது வளர்ச்சியை கண்டு அஞ்சிய மத்திய,மாநில அரசுகள் இந்த விதமான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது என சீமான் காரசாரமாக பேட்டியளித்துள்ளார். மேலும் நேற்று இரவு 40 நிமிடங்கள் வாட்ஸ்அப் செயலி முடங்கியது, இதுவும் அவர் வளர்ச்சியை தடுக்கவே என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். சீமான் கூறிய இக்கருத்துக்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.