மருந்துகளின் விலையை 50 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்..! தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி.
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் ஆன்டிபயாட்டிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பி.சி.ஜி.தடுப்பூசி உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும்.
மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இந்த மருந்துகளின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதை ஏற்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் முதற்கட்ட சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படுவதால், அவை சந்தையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது. இதை அடுத்தே விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.