புரெவி புயல்… பாம்பனில் ஏற்றப்பட்ட 7 ஆம் எண் கூண்டு எச்சரிக்கை…தென்மாவட்டங்களின் நிலை???

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

 

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பன் பகுதிக்கு சுமார் 530 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. திரிகோணமலையில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 700 கி.மீ தொலைவிலும் புரெவி மையம் கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் பாம்பன் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத் தற்போது 7 ஆம் எண் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ள அறிக்கையில், இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும் கன்னியாக்குமரிக்கு கிழக்கே 700 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு உள்ளதாக கூறியுள்ளது. இந்தப் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இதனால் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அருகில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திரிகோணமலை அருகே புரெவி புயல் கரையைக் கடந்த பின் அதே வேகத்துடன் மேற்கே நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை அடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.

தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயல் பாம்பன்-குமரி அருகே கரையைக் கடக்கும்போது மணிக்கு 95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தென் தமிழகத்தில் கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2,3 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.