சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

கடந்த சில வருடங்களாக விஜய் படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்ததாக சரித்திரம் இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருந்தாலும், அந்த பிரச்சனையே அவருடைய படங்களுக்கு செலவில்லாத புரமோஷனாகவும் மாறி வருகிறது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கொண்டிருக்கும் 'சர்கார்' படத்திற்கான பிரச்சனை இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. விஜய் புகைபிடிப்பது போன்று இருந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் விடுத்தன. இந்த விஷயம் குறித்து தனியார் செய்திச்சேனல் ஒன்றில் ஒருமணி நேர விவாதம் ஒன்றும் நடைபெற்றது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தில் விஜய் புகைப்பிடித்தவாறு இருக்கும் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுசுகாதார துறை, விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதார துறை எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.