NOTA Review
நோட்டா: நோட்டாவுக்கு மெஜாரிட்டி கிடைக்குமா?
லண்டனில் இருந்து தனது பிறந்த நாளை கொண்டாட சென்னை வரும் விஜய்தேவரகொண்டா, திடீரென இரவோடு இரவாக சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்வராகிறார். தற்போதைய முதல்வரும் விஜய்யின் அப்பாவுமான நாசர் மீது ஒரு வழக்கு இருப்பதால் அந்த வழக்கிற்கு தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்வதால் இரண்டு வாரங்களுக்கு விஜய்தான் முதல்வர் என நாசர் முடிவெடுக்கின்றார். முதல்வர் பணி என்றால் என்னவென்றே தெரியாமல் இரண்டு வாரங்கள் வீடியோகேம் விளையாடி விஜய் கழிக்கும் நிலையில், நாசர் மீதான வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக வருகிறது. இதனால் நாசர் சிறை செல்கிறார். இதனால் ஆளுங்கட்சியினர் செய்யும் வன்முறையால் ஒரு பேருந்து எரிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் பேருந்தில் இருந்த சிறுமி உயிரிழக்க அதிர்கிறார் விஜய். உடனடியாக சம்பவ இடத்திற்கு வரும் விஜய், மூத்த பத்திரிகையாளர் சத்யராஜ் அறிவுரையின்படி முதல்வர் பதவி என்பது எவ்வளவு சக்திமிக்க பதவி, இதை வைத்து மக்களுக்கு என்னென்னவெல்லம் செய்யலாம் என்பதை அறிந்து களமிறங்குகிறார். களமிறங்கிய பின்னர்தான் கண்ணுக்கு தெரியாத, தெரிந்த எதிரிகள் இருப்பதும் அவர்களால் தனது குடும்பத்தினர்களுக்கு ஆபத்து இருக்கின்றது என்பதையும் உணர்கிறார். இருப்பினும் துணிந்து அதிரடி ஆட்டத்தை தொடங்கும் விஜய்க்கு வெற்றி பெற்றாரா? என்பதுதான் மீதிக்கதை
விஜய்தேவரகொண்டாவின் முதல் தமிழ் படமே பெரிய நடிகர்களை கலங்க வைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருடைய நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தும் அளவுக்கு திரைக்கதையில் அழுத்தம் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. பேருந்து எரிப்பு சம்பவத்தின்போது பத்திரிகையாளர்களை பார்த்து சீறுவது, தனக்கு அரசியல் குருவாக இருக்கும் சத்யராஜூக்கே கட்டளையிடுவது, அரசியல் சதுரங்க காய்களை நகர்த்துவது என படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்திருக்கின்றார் விஜய்
சத்யராஜ் மற்றும் நாசர் இருவரும் இந்த படத்தின் இரண்டு தூண்கள் எனலாம். இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளனர். சத்யராஜின் பிளாஷ்பேக் காட்சியை கடைசியில் கதையுடன் இணைத்துள்ளது புத்திசாலித்தனம் என்றாலும் இளமையான சத்யராஜை காண சகிக்க முடியவில்லை. சாதாரணமாகவே நக்கலுடன் கூடிய வசனம் பேசுவதில் கைதேர்ந்த சத்யராஜ், அரசியல் படம் என்றால் விட்டு வைப்பாரா? இன்றைய அரசியல்வாதிகளை வறுத்தெடுத்துவிட்டார் சத்யராஜ். குறிப்பாக 'வார்-ரூமுக்கு அவர் நக்கலாக அமைச்சர்களிடம் கொடுக்கும் விளக்கம். எந்த கதாபாத்திரத்தையும் சாதாரணமாஅக ஊதித்தள்ளும் நாசருக்கு இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது என்பது எளிதான விஷயமே
கருணாகரன், யாஷிகா ஆனந்த் இருவரது காட்சிகளையும் படத்தில் இருந்து முழுவதுமாக தூக்கிவிட்டால் கூட படத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. முதல்வரின் வலதுகையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை முதல்வராக்காமல் ஒரு அல்லக்கையை நாசர் முதல்வராக்கியது குறித்து வருந்தும் காட்சிகள் சூப்பர்
நாயகி மெஹ்ரீன் படத்தின் ஆரம்பத்தில் முதல்வர் நாசரிடம் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கிறார். அதன்பின்னர் காணாமல் போய் அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றார். சஞ்சனாவுக்கு சொல்லி கொள்ளும்படியான கேரக்டர். நடிப்பும் ஓகே ரகம். இவருடைய கேரக்டர் ஒரு வாரிசு பெண் அரசியல்வாதியை ஞாபகப்படுத்துவதால் ரசிக்க முடிகிறது.
சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் தேறவில்லை என்றாலும் கதைக்கேற்றவாறு பின்னணி இசை சிறப்பாக உள்ளது. சந்தானகிருஷ்ணன் கேமிரா மற்றும் ரெய்மண்ட் எடிட்டிங் ஓகே ரகம்.
இயக்குனர் ஆனந்த்சங்கரின் திரைக்கதையில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்களை ஞாபகப்படுத்தினாலும் அவை கொஞ்சம் பழையதாக உள்ளது. முதல்வர் வரும்போது குனிந்து கும்பிடுவது, ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வது, பி.கே.நகர் இடைத்தேர்தல், கார்ப்பரேட் சாமியாரின் பின்னணி அரசியல், சென்னை வெள்ளம், வெள்ள நிவாரண பணியின்போது ஸ்டிக்கர் ஒட்டுவது, மருத்துவமனையில் முதல்வரை யாரையும் பார்க்க முடியாமல் தடுப்பவை இவையெல்லாம் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களால் அடித்து துவைக்கப்பட்ட மேட்டர்கள். இருப்பினும் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளையும் கிண்டல் செய்திருக்கும் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது.
இடைவேளையின்போது அரசியல் ஆட்டம் ஆரம்பம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு இரண்டாம் பாதியில் எந்த விறுவிறுப்பான ஆட்டமும் திரைக்கதையில் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றமே. ஒரு முதல்வருக்கு ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியாக குடைச்சல் கொடுத்தால் நேரடி மற்றும் மறைமுக அரசியல் தாக்குதல் என்னென்ன நடக்கும் என்பதை இன்னும் விறுவிறுப்பான காட்சிகளை படத்தில் இணைத்திருக்கலாம். முதல்வராக விஜய் எடுக்கும் ஒரு சில முடிவுகள் தவிர மற்றவை அதிபுத்திசாலித்தனமாக இல்லை என்பது ஏமாற்றமே. 'முதல்வன்' படத்தில் ஒருநாள் முதல்வராக வரும் காட்சிகளில் ஒருசிறு பகுதி கூட இந்த படத்தில் இல்லை.
மொத்தத்தில் ஒரு நல்ல விறுவிறுப்பான அரசியல் படமாக வந்திருக்க வேண்டிய படத்தை திரைக்கதையால் மிஸ் செய்துவிட்டது வருத்தமே
- Read in English