மொழி தெரியாத ஹீரோ என்பதால் எனக்கு வசதியாக இருந்தது: 'நோட்டா' இயக்குனர் ஆனந்த் சங்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அர்ஜூன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா, சன்சனா, சத்யராஜ், நாசர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஹீரோ விஜயதேவரகொண்டா: “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன்.. ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்... இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது.. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங்.. இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை
ஹீரோயின் சன்சனா நடராஜன்: குறும்படத்தில் நடித்துவிட்டு, அடுத்ததாக வெப் சீரிஸில் நடித்திருந்த என்னை எப்படியோ கண்டுபிடித்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். அதேபோல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் என்னை நம்பியதற்கு நன்றி”
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்: “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம். இந்தப்படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என என்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் என்ட் கார்டு வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்
சத்யராஜ்: “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.. எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டும் பிரமித்து போனேன். ரொம்பநாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார்
நாசர்: “ரொம்பநாள் கழித்து ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். நடிப்பு என்கிற விஷயத்தை சுவைக்கின்ற படமாக இது இருக்கும். இருமுகன் படத்தில் என்னை ரொம்ப மெதுவாக வசனங்களை பேச சொன்னார்.. ஆனால் இந்தப்படத்திலும் அப்படி ஏதாவது சொல்வாரோ என பயந்தேன்.. ஆனால் நான் நினைத்து வைத்தது போலவே இந்தப்படத்தில் பேச சொல்லிவிட்டார். இது அரசியல் படம் என்பதால் இதில் நாங்கள் அவ்வப்போது ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும்போதும் வெளியில் அதேபோல நிகழ்வு நடந்திருக்கும் என்பதுதான் எங்களுக்கு ஆச்சர்யம் தந்தது
இயக்குனர் ஆனந்த் சங்கர்: “இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது.. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அப்போதுதான் தெலுங்கில் பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி என கலக்கலான வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் தேவரகொண்டா உருவாகிக்கொண்டு இருந்தார். தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். ஏன் இவரையே தமிழ் பேசவைக்க கூடாது என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொன்னேன்.. அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டவே விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கதை சொன்னேன். முதலில் அரைமணி நேரம் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப்படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார். மொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்து எனக்கு வசதியாக இருந்தது. படத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout