ஒன்றல்ல ... இரண்டல்ல... 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருக்கிறது ஒரு வங்கி!!! அதிர்ச்சித் தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
கொரோனா ஊரடங்கினால் உலகப் பொருளாதாரமே சரிந்து கிடக்கிறது. இது தெரிந்த விஷயம்தான். ஆனால் பொருளாதாரம் ஏற்படுத்திய நெருக்கடியால் ஒரு வங்கி தனது 35 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HSBC நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமான வங்கியாக அறியப்படுகிறது. தற்போது இந்த வங்கி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பொருளாதார ஊரடங்கினால் வங்கியின் பொருளாதாரம் நெருக்கடியான நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது, எனவே நிலைமையை சமாளிக்கும் விதமாக ஆட்குறைப்பு செய்யப்படும் என உலகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் பணியாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்நிறுவனம் ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற நடைமுறைகளில் ஈடுபட ஆரம்பித்தது. கடந்த மார்ச் மாதம் 4.5 பில்லியன் டாலர்களை சேமிப்பதற்காக இதேபோன்ற ஆட்குறைப்பு செய்கைகளைக் கையில் எடுத்தது. அந்த நடவடிக்கை கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பொருளாதாரத்தை எப்படியும் சரிக்கட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அனதால் 35 ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப் பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை தொடர்ந்து இழந்து வரும் சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் வேலைக்கான சம்பளத்தை குறைக்கும் நடவடிக்கைகளும் தொடர்கிறது. ஸ்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இப்படி தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் இதுவரை கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.