முடிவுக்கு வந்தது கனமழை: வெதர்மேன் அறிவிப்பால் கேரள மக்கள் நிம்மதி
- IndiaGlitz, [Sunday,August 19 2018]
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் கேரளாவில் பெய்து வந்த கனமழையால் அம்மாநில மக்கள் இதுவரை சந்தித்திராத பேரிடரை சந்தித்துள்ளனர்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழையால் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊரிலேயே அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கேரள மக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் அளித்துள்ளார். அதாவது கடந்த சில நாட்களாக பயமுறுத்தி வந்த கனமழை முடிவுக்கு வந்ததாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ரேடார் படங்களில் இருந்து கணித்து அறிவித்துள்ளார். மேலும் கனமழை இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு வெதர்மேனின் இந்த அறிவிப்பு கேரள மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகளில் இன்று மற்றும் நாளை சிறிய அளவில் மட்டும் மழை பெய்யும் என்றும் படிப்படியாக இந்த மழையும் முடிவுக்கு வரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் மேலும் கூறியுள்ளார்.