சர்வாதிகாரத்தின் உச்சம்- உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க செல்லப்பிராணிகளைக் கொல்லும் வடகொரியா!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
உலகத்திலேயே மிகவும் மர்மமான நடவடிக்கைகளைக் கொண்ட நாடான வடகொரியா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களிடம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் நாட்டு மக்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்களை ஹோட்டல் கடைக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சர்வாதிகாரச் சட்டத்திற்கு அடிபணிந்து தற்போது அந்நாட்டு மக்களும் தங்களது செல்லப் பிராணிகளை ஹோட்டல்களில் கொடுத்து வருவதாகவும் நியூசிலாந்து ஹெரால்ட் செய்தி வெளியிட்டு இருக்கிறது. காரணம் ஒருவேளை அரசாங்கம் வெளியிடும் அறிவிப்புக்கு இணங்க மறுத்தால் அது சட்டத்தை அவமதிப்பதற்கு ஈடாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் தற்போது கொரோனா வேகமாகப் பரவிவருவதாகக் கூறப்படுகிறது. உலகத்திலேயே தனித்துவமான நடவடிக்கைகளை கொண்ட நாடான வடகொரியா தற்போது கடுமையான பொருளாதார வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அணுகுண்டு சோதனை காரணமாக உலகத்தின் பெரும்பாலான நாடுகள் வடகொரியா மீது பொருளதாரத் தடையை விதித்து இருக்கின்றன. கடந்த ஆண்டு அந்நாட்டில் பெய்த கனமழை காரணமாகவும் பயிர் விளைச்சல் இன்றி நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலைமைக்கு அந்நாட்டு அரசாங்கம் தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் செல்லப்பிராணிகளை ஹோட்டல்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சி அடைந்து இருந்தாலும் வேறுவழியின்றி நாய்களை ஹோட்டல் கடைக்காரர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு நாட்டு அரசாங்கம் மக்களின் உணவுத்தேவையை பூர்த்திச் செய்ய வேண்டியது முக்கியமான கடமைதான், அதற்காக செல்லப்பிராணிகளை யாராவது கொல்லத் துணிவார்களா என அதிபருக்கு எதிரான கருத்துகள் உலகம் முழுவதும் எழுப்பப் படுகின்றன.
இன்னொரு பக்கம் நாய்கள் போன்ற பிராணிகளை அதிகளவில் வளர்க்கும் பணக்காரர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். இப்பழக்கம் முதலாளித்துவத்தின் தாக்கத்தால் வந்தது. அதைத் தவிர்க்கும் பொருட்டு இத்தகைய விசித்திர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம் என நியூசிலாந்து ஹெரால்ட் தகவல் தெரிவித்து இருக்கிறது. எது எப்படியோ உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க செல்லப்பிராணிகளை கொல்வது சரியா? இப்படி ஒரு அரசாங்கம் செயல்படுமா? எனப் பலரும் தற்போது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது