வடகொரிய அதிபர் மரணம்? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியத் தகவல்!!!
- IndiaGlitz, [Saturday,August 29 2020]
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டு தென்கொரியாவின் முன்னாள் தூதர் ஜாங் சாங் கடும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுமட்டுமல்லாது மனஅழுத்தம் காரணமாக சில முக்கிய பொறுப்புகளை அவரது தங்கை கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மேலும் அதிபரின் உடல்நிலைக் குறித்து சந்தேகத்திற்குரிய கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் வடகொரிய அதிபர் விசவாயிகளிடம் ஆலோசனையில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை அந்நாட்டு அரசாங்க ஊடகம் வெளியிட்டு இருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் அதிபர் நல்ல உடல்நிலையுடன் இருப்பது போலவும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது போலவும் தெரிகிறது. இதனால் அதிபர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார் என்ற தகவலை மீண்டும் ஊடகங்கள் ஒளிபரப்பத் தொடங்கி இருக்கின்றன.
சமீபகாலமாக வடகொரிய அதிபரின் மரணம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. கடந்த மே மாதம் அதிபர் இறந்தே விட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கடும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்நாட்டில் நடைபெற்ற உரத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அதிபர்.
இந்நிலையில் தற்போது கோமாவில் இருக்கிறார், அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது என எழுப்பப்பட்ட சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வடகொரிய ஊடகம் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. தற்போது வடகொரியாவில் கனமழை மற்றும் சூறாவளி காற்று ஏற்பட்டு விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிபர் நேரில் சென்று விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அந்தச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.