கொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா???
- IndiaGlitz, [Saturday,October 24 2020]
ஒவ்வொரு ஆண்டும் மங்கோலியா மற்றும் சீனாவின் பல பாலைவனப் பகுதிகளில் இருந்து மணல் தூசுகள் அடங்கிய மஞ்சள் தூசு படலங்கள் கொரிய நாடுகளை நோக்கி படையெடுக்கிறது. இந்த மஞ்சள் தூசு படலங்கள் மூலம் தற்போது வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் அந்நாட்டு அரசு, மக்களை கடுமையாக எச்சரித்து வருகிறது. இதனால் சில மாதங்களுக்கு வெளிப்புறப் பூச்சு போன்ற கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறும் வடகொரியா மக்களுக்கு உத்தரவிடப் பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்றும் காற்றில் பல மணிநேரங்கள் வரை கொரோனா வைரஸால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தி இருந்தது. என்றாலும் காற்றில் சுற்றித்திரியும் கொரோனா வைரஸ் மற்றர்வர்களுக்கு மிகவும் அரிதாகவே நோயை ஏற்படுத்தும் என்றும் அந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தனர்.
பொதுவா கொரோனா பாதிப்பு என்பது பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருக்கும்போதோ அல்லது அவர் இருமல் மற்றும் தும்மும்போதோ தான் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காற்றில் சுற்றித்திரியும் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமில்லாத காரியம் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
இந்நிலையில் வடகொரிய அரசு சீனாவில் இருந்து பரவும் மஞ்சள் தூசு படலத்தின் மூலம் நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறது. மேலும் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களை வீட்டிற்குள்ளே இருக்கும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறது.
இதனால் வடகொரியாவில் கொரோனா அச்சம் அதிகரித்து காணப்படுவதாக ஊடகங்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பதற்கான அடையாளத்தை பார்க்க முடியவில்லை என்று தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து வருகிறார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஜனவரி மாதத்திலேயே சீனாவின் எல்லை உட்பட பல நாடுகளோடு இருந்து வந்த எல்லை முற்றிலும் மூடப்பட்டு விட்டது.
விமானப் போக்குவரத்து ரத்து, வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி ரத்து எனக் கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து வரும் வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்றே அந்நாடு கூறிவருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து பரவும் மஞ்சள் தூசு படலத்தைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு வடகொரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தென் கொரியா இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.