எல்லைத் தாண்டி ரோந்து பணியாற்றிய அதிகாரி… மண்ணெய் ஊற்றி எரித்த கொடூரச் சம்பவம்…
- IndiaGlitz, [Thursday,September 24 2020]
சர்வாதிகாரத்தின் உச்சமாகக் கருதப்படும் வடகொரியா தற்போது கொலை நடுங்க வைக்கும் ஒரு சம்பவத்தை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென் கொரியாவின் கப்பல் துறை அதிகாரி ஒருவர் வடகொரியாவின் எல்லைக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டதற்காக அவரைச் சுட்டுக் கொன்று மண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை தென்கொரியா அதிகாரப் பூர்வமாக வெளியிட்டதோடு சர்வதேச அளவில் வடகொரியா மீது கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டு இருக்கிறது.
கடந்த திங்கள் கிழமை அன்று தென்கொரியாவின் கப்பல் துறை அதிகாரி ஒருவர் வடகொரியாவின் எல்லையைத் தாண்டி 10 கி.மீ அளவிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்படிச் செல்லும்போது இராணுவத்தால் பிடிக்கப்பட்டு சுடப்பட்டதாகவும் பின்பு மண்ணெய் ஊற்றி கொழுத்தப் பட்டதாகவும் தென் கொரியா கடுமையான குற்றம் சாட்டியிருக்கிறது. இச்செயலுக்கு உலகம் முழுக்க பலரும் எதிர்ப்பினைத் தெரிவித்து வரும் நிலையில் இதற்கான முழு விளக்கத்தையும் அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் வட கொரியா இந்தச் சம்பவத்தைப் பற்றி பொது வெளியில் எந்தக் கருத்தையும் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மீன் வளத்துறை அதிகாரியாக பணியாற்றும் அந்த அதிகாரி ஒருவேளை வட கொரியாவிற்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்றும் ஊடகங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால் உண்மையான நிலவரத்தை இருநாடுகளும் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வில்லை என்பதுதான் பெரும் கொடுமையே.
வடகொரியா கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஜனவரி முதல் தென் கொரியாவோடு இருந்த அனைத்து எல்லைப் பகுதிகளையும் மூடி விட்டது. அதோடு இருநாடுகளுக்கும் இடையிலும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடிதப் போக்குவரத்தையும் வடகொரியா துண்டித்துக் கொண்டது.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதத்தின் இறுதியில் தென் கொரியாவின் எல்லைப் பகுதியில் கொரோனா அறிகுறியோடு ஒருவர் தென்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் எல்லைத் தாண்டி வருவோரை சுட்டுக் கொல்லவும் அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவி வெளியிட்டார். இந்நிலையில் எல்லைத் தாண்டி ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு எரிக்கப்பட்டு இருக்கிறார் என்பதுதான் பெரும் கொடுமையே.