ஆல்கஹால் இல்லாத பீர் வகைகள் உடலுக்கு நல்லதா? அதன் நன்மைகள் என்ன?

மது என்றாலே உடலுக்கு கெடுதி என்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஆல்கஹால் இல்லாத பீர் வகைகளை குடிக்கலாமா? அப்படி குடிக்கும்போது அது உடல்நலத்துக்கு ஆபத்தாக முடியுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

கூடவே பெண்களும் ஆல்கஹால் இல்லாத பீர் வகைகளை சமீபகாலமாக அருந்தி வருகின்றனர். அதிலும் கர்ப்பிணி பெண்கள் கூட சில நேரங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் ஆல்கஹால் இல்லாத பீர் வகைகளை நம்பலாமா? என்ற சந்தேகம் வருகிறது.

பொது இடங்களில் மது அருந்த தயக்கம் காட்டும் சிலரும், மது பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களும் இந்த வகை பீர்களை தாராளமாக குடிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். எனவே மதுப்பழக்கத்தில் இருந்து வெளிவர இந்த வகை பீர்கள் உதுவுமா? என்பதும் இன்னொரு சந்தேகமாக இருக்கிறது.

கூடவே பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் ஆல்கஹால் பீர்களுக்கு சிலர் ஆயிரக் கணக்கில் விலைக்கொடுத்து வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பீர்களில் என்ன நன்மை இருக்கிறது? நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ப அதில் நம்பகத்தன்மை இருக்குமா? இதுபோன்ற சந்தேகங்களும் இக்கின்றன.

ஆல்கஹால் இல்லாமல் தயாரிக்கப்பட்ட பீர் என்பதை நாம் அதன் பெயரை வைத்தே கண்டுபிடித்து விடுகிறோம். உண்மையில் சந்தைக்கு வரும் பெரும்பாலான பீர்கள் ஆல்கஹால் இல்லாமல் தயாரிக்கப்பட்டது எனப் பெயரை வைத்து இருந்தாலும் அவற்றில் குறைந்த அளவு ஆல்கஹால் விடுபடாமல் இருக்கிறது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படி குறைந்த அளவு ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் பீர்களினால் உடல்நலத்துக்கு கேடு வராது எனச் சிலர் சொல்கின்றனர். ஆனால் குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பீர் வகை மூலமாகவும் பலருக்கு உடல்நலக் கோளாறு வருவதை மருத்துவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பெண்கள் மது அருந்தும்போது ஆண்களை விட 50% வேகமாக அவர்களின் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதாகவும் இதயம் தொடர்பான பிரச்சனை வருவதாகவும் மருத்துவர்கள் சுட்டுகின்றனர். கூடவே பெண்களின் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் மதுவின் தாக்கம் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இதனால் உடனே மயக்கம், குறைந்த நாட்களில் மதுவிற்கு அடிமையாவது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

எனவே குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பீர் வகைகள் பெண்களின் உடல்நலத்திற்கு கேடாகத்தான் முடியும். அதோடு இந்த வகை பீர்களை அருந்தும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற ஆல்கஹால் அல்லாத பீர்களையும் தவிர்ப்பது நல்லது.

பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் பீர் வகைகள் என்ற பெயரில் நாம் அதிக விலைக்கொடுத்து வருகிறோம். உண்மையில் ஆல்கஹால் இல்லாத பீர்களை யாரும் தயாரிக்க முடியாது. எனவே சுத்தம், சுகாதாரம் என்ற விஷயங்களுக்காக அதிக பணம் செலவழிக்கலாமே தவிர விளம்பரத்திற்காக பணத்தைச் செலவிட வேண்டாம்.

மது பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட நினைக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு இந்த ஆல்கஹால் பீரை பலரும் அருந்தி வருகின்றனர். உண்மையில் ஆல்கஹால் இல்லாத பீர்களில் உண்மையான பீரைப் போன்றே சுவை, தோற்றம், நறுமணம், சிறிய அளவு ஆல்கஹால் இருக்கிறது. இதனால் மதுவை விட வேண்டும் என நினைப்பவர்கள் கூட அதிக அளவு குடித்து அந்த மதுவில் கிடைக்கும் திருப்தியை ருசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஆல்கஹால் இல்லாத பீர்களில் குறைந்தது 0.05% ABV முதல் அதிகப்பட்சம் 0.5% ஆல்கஹாலைக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில பிராண்டுகளில் 1.2% வரை கூட ஆல்கஹாலின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த அடிப்படையில் ஆல்கஹால் என்பதைத் தவிர்க்க முடியாமல் போகிறது.

பொதுவாக ஆல்கஹாலை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மது பிராண்டுகளில் இருந்து (ஃபினிஷ்டு) நீக்கும் முறையில் ஆல்கஹால் இல்லாத பீர் தயாரிக்கப்படுகிறது. அடுத்து அல்கஹால் உருவாகாமல் இருக்க செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்துவது. ஆல்கஹாலைக் குறைப்பதற்கு பீரைக் கொதிக்க வைப்பது. அடுத்து பீரில் இருந்து ஆல்கஹாலை பிரித்து வடிக்கட்டுவது போன்ற முறைகளில் ஆல்கஹால் இல்லாத பீர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த 4 முறைகளிலும் குறைந்த அளவிற்கேனும் ஆல்கஹால் தங்கி இருக்கும் என்பதுதான் உண்மை.

நன்மைகள்

பாட்டில் பாட்டிலாக அருந்தி உடலில் அதிக ஆல்கஹாலை ஏற்றிக் கொள்வதற்கு பதிலாக குறைந்த அளவு ஆல்கஹாலைக் கொண்டு திருப்தி அடைய இந்த வகை பீர்கள் உதவுகின்றன. அந்த அடிப்படையில் இந்த வகை பானங்கள் சிறந்தது.

அதிக ஆல்கஹால் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவை குறைப்பதற்கும் அவற்றை சார்ந்து இருக்கும் தன்மையை உடல் மறந்து நன்றாக செயல்படுவதற்கும் இந்த வகை பானங்கள் உதவுகின்றன. கூடவே சில நேரங்களில் அளவை குறைக்கவும் இது உதவலாம். ஏனெனில் எவ்வளவு குடித்தாலும் அதிக போதை இல்லாமல் சிலர் குறைந்த அளவோடு முடித்துக் கொள்கின்றனர்.

குடிப்பழக்கத்தை விட்டு வெளியேற குறைந்த அளவில்தான் இது உதவுகிறது. காரணம் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் உண்மையான பீர்களைப் போன்றே இந்த வகை பீர்களும் உருவாக்கப்படுதால் சில நேரங்களில் ஆபத்தாக முடிகிறது.

உடலுக்கு செல்லும் ஆல்கஹால் குறைந்த அளவாக இருந்தாலும் கல்லீரல் பாதிப்பு, இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இந்த அடிப்படையில் மனித மனத்தை ஏமாற்றலாமே தவிர இதுமுழுமையான தீர்வல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பாட்டில் பாட்டிலாக குடித்து உடலைக் கெடுத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த வகை பீர்களை அருந்தி சற்று பாதிப்பின் அளவில் இருந்துத் தப்பித்துக் கொள்ள இந்த வகை பீர்கள் உதவியாக இருக்கும்.