மூன்று புதிய மாடல்களுடன் மீண்டும் கலக்க வருகிறது நோக்கியா
- IndiaGlitz, [Tuesday,June 13 2017]
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மொபைல்போன் அறிமுகமானபோது அனைவருக்கும் தெரிந்த ஒரே மாடல் நோக்கியா தான். ஆனால் காலப்ப்போக்கில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி காரணமாகவும், ஆண்ட்ராய்ட் போனின் வருகை காரணமாகவும் நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன் சந்தையில் இருந்து ஒதுங்கி இருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான நோக்கியா 3310 மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மூன்று புதிய மாடல்கள் வெளியாகவுள்ளது.
ரூ.9499 என்ற விலையில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 3 மாடல் போன்கள் ஜூன் 16ஆம் தேதியும், ரூ.12899 விலையில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 5 மாடல் வரும் ஜூலை 7ஆம் தேதியும், ரூ.14999 என்ற விலையில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 6 வரும் ஜூலை 14 தேதியும் விற்பனைக்கு வரவுள்ளது.
லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சந்தைக்கு வெளிவரவுள்ள இந்த மூன்று மாடல்களும் கண்ணை கவரும் அழகிய டிசைனில் அமைந்துள்ளதாக இந்த போன்களை வெளியிடும் HMD குளோபல் நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் அஜய்மேத்தா கூறியுள்ளார். குறிப்பாக நோக்கியா 6 மாடல் முழு மெட்டல் பாடியுடன் நேர்த்தியான டிசைனைக் கொண்டுள்ளதாகவும், மற்ற இரு மாடல்களில் இல்லாத 3 ஜி.பி ரேம் இதில் இருப்பதாகவும் கூறிய அஜய், இந்த மாடல் குவால்கோம் ஸ்னாட்பிராகன் 430 பிராஸசர் உடன், 16 எம்.பி திறன்கொண்ட ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி ஃபிரன்ட் கேமராவும் இருப்பதாகவும் கூறியுள்ளார். 3000 mAh பேட்டரி, டூயல் ஸ்பீக்கர்ஸ், ஃபிங்கர்பிரின்ட் சென்சார், 5.5 இன்ச் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் வெளிவரும் இந்த போன்கள் மீண்டும் நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் தன்னை நிலைநாட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.