20 வருடங்களுக்கு பின்னும் 70% சார்ஜ் இருக்கும் மொபைல் போன்!

  • IndiaGlitz, [Sunday,August 25 2019]

தற்காலத்தில் மொபைல் போன் என்பது அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிவிட்டது. மொபைல் போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலை பலருக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சார்ஜ் நிற்காமல் போவது. எனவே பலர் தற்போது பவர்பேங்க்கையும் கையில் எடுத்து கொண்டு அலைகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Ellesmere Port என்ற பகுதியை சேர்ந்த கெவின்மூடி என்பவர் கடந்த இருபது வருடங்களுக்கு முன் நோக்கியா 3310 என்ற மாடல் மொபைல் போனை வாங்கி அதனை தனது டேபிளில் உள்ள டிராயரில் வைத்துவிட்டு அதன்பின் மறந்துவிட்டார். இருபது ஆண்டுகளுக்கு பின் தற்செயலாக டிராயரை சுத்தம் செய்தபோது அந்த மொபைல் போனை அவர் பார்த்துள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இருபது வருடங்களாக சார்ஜ் செய்யாமல் இருந்தபோதிலும் அந்த போன் இயங்கும் நிலையில் இருந்தது மட்டுமின்றி 70% சார்ஜ் இருந்ததை பார்த்து அதிசயம் மற்றும் ஆச்சரியம் அடைந்தார். ஒரு காலத்தில் வாடிக்கையாளர்களிடையே புகழ் பெற்றிருந்த இந்த 3310 மாடல் தற்போது வழக்கத்தில் இல்லாவிட்டாலும் இந்த செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.