இந்தியச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பவன் சுகதேவிற்கு நோபால் பரிசான “டைலர் விருது”
- IndiaGlitz, [Saturday,February 01 2020]
சுற்றுச்சூழல் துறையில் நோபால் பரிசான “டைலர் விருது” இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பவன் சுகதேவ் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. பசுமை பொருளியலைக் கட்டமைத்தற்காக (Environmental Ecnomist) 2020 ஆம் ஆண்டிற்கான ”டைலர் விருது” ஐ பெற உள்ளார். மேலும், விருதினை பவன் சுகதேவ் மற்றும் இயற்கை பாதுகாப்பு உயிரியலாளர் (Conservation Biologist) க்ரெட்சேன் டெய்லி இருவரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொருவருக்கும் தங்கப் பதக்கத்துடன் தலா 200, 000 டாலர் ரொக்கப் பரிசும் வழங்கப் பட உள்ளது.
முன்னதாக இந்திய “இயற்கைச் சூழலின்” பொருளாதார மதிப்பினை இருவரும் கணித்து இருந்தனர். இந்த நிலையில் “டைலர் விருது” அறிவிப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சியான தருணமாகக் கருதப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கத்தில் துரிதமாகச் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளும் ஆய்வுகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இயற்கையின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இயற்கையின் ஆற்றலைப் புரிந்து கொள்ளவும், அதன் சூழல் அமைவினைக் குறித்து மதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்ட இரண்டு அறிஞர்களுக்கும் டைலர் விருது வழங்கப் பட உள்ளது.
பவன் சுகதேவ், 2008 இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் (UNEP) “பல்லுயிரியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொருளாதார அமைப்பு” (TEEB) அறிக்கையின் முதன்மை நிபுணராக பணியாற்றினார். இவரின் உழைப்பினால் உருவான இந்த (TEEB) அறிக்கை உலக அளவில் இயற்கையின் மதிப்புகளைக் கண்டறிவதற்கு முன்னணி அமைப்பாக மாறியது என்பது குறிப்பிடத் தக்கது.
2009 இல் ஐ.நா. சபை “பசுமை பொருளாதார முன்னெடுப்பு”க்கு பவன் சுகதேவ்வை தலைவராக நியமித்தது. இந்த பசுமை பொருளாதாரத்தின் வழியாக புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், வறுமையினை ஒழிக்கவும் முடியும் என்பதை இவர் எடுத்துக் கூறினார். மேலும், உலக நாடுகள் இயற்கை வளங்களை பாதுகாத்து, அவற்றின் மதிப்பினை அரசுகள் கணக்கிட்டு கொள்ள இருவரது ஆய்வுகளும் மிகவும் உறுதுணை புரியும் என்பது முக்கியமான அம்சமாகும்.
ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டத்தில் (TEEB) பணி ஆற்றியதற்காக அவருக்கு இந்த ஆண்டிற்கான “டைலர் பரிசு” அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது பவன் சுகதேவ் உலகளாவிய இயற்கை பாதுகாப்பிற்கான நிதியத்தின் (WWF) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
டைலர் விருதினை பெற உள்ள டெய்லி ‘நாட்கேப்‘ (NATCAP) நிறுவனத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத் தக்க ஒன்று. உலக அளவில் சுற்றுச்சுழல் குறித்த கொள்கை திட்டங்களுக்கு இந்த அமைப்பு அறிவுரைகளை வழங்கிவரும் ஒரு முக்கியமான அமைப்பாகும்.
பவன் சுகதேவ், “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள நீங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்க வேண்டியதில்லை” உலக நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் மதிப்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விருதினைக் குறித்து “சுற்றுச்சூழல் மற்றும் அதன் மதிப்பை பற்றிய உலகளாவிய புரிதலுக்கு சுகதேவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது” என்று ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் சத்யா எஸ். திரிபாதி தெரிவித்துள்ளார்.
‘டைலர் விருது‘ பெற இருக்கும் மற்றொரு ஆய்வாளரான டெய்லி “சுற்றுச்சூழல் அமைப்பை ஒரு வகை மூலதனச் சொத்தாக நாம் நினைக்க வேண்டும், மனித மூலதனம் அல்லது நிதி மூலதனம் போன்ற சொத்துகள் நம்மிடம் இருப்பது போலவே, நமக்கு ‘இயற்கை மூலதனம்’ உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் இயற்கையை விரைவான வேகத்தில் சீரழித்து வருகிறோம் என்ற குற்றச் சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. தற்போது இந்தியா, பவன் சுகதேவ்வின் ஆலோசனைகளைப் பெற்று இயற்கை சூழலைத் தொகுப்பை மாற்றி அமைப்பதோடு, மதிப்பு மிக்கதாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.