தேர்தலுக்கு முன் விஸ்வரூபம் எடுக்கும் உட்கட்கி பூசல்- தமிழக காங்கிரஸ்ஸில் சலசலப்பு!
- IndiaGlitz, [Saturday,March 13 2021]
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதன் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்துள்ளது. இந்த பங்கீடுகளை அடுத்து தமிழகக் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பூசல்களும் குழப்பங்களும் இருப்பதாக விமர்சிக்கப் படுகிறது.
திமுகவுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முறையில் முறைகேடு நடப்பதாக அக்கட்சியின் எம்.பி ஜோதிமணியே போர்க்கொடி தூக்கி உள்ளார். மேலும் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தொகுதியில் தொடர்ந்து சீட் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறை கூறி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை அடுத்து காங்கிரஸ் மீது பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதில் இல்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிற உணர்வுகளை நான் அறிவேன். நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும் வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்து உள்ளார்.
எம்.பி. ஜோதிமணியின் இந்தப் பதிவை அடுத்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தன்னுடைய டிவிட்டரில் சிலர் விமர்சனத்துக்காக இப்படி கூறிக்கொண்டு இருக்கின்றனர் எனப் பதிலடி தந்துள்ளார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே இப்படி காங்கிரஸில் கட்சி பூசல் நடக்கிறது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.