சென்னை 'குடி' மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்: தமிழக அரசு அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்த நிலையில் அந்த தளர்வுகளில் முக்கியமானதாக மதுபான கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முதல் தெலுங்கானா, கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்திலும் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று மாலை அறிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் சென்னையில் மட்டும் மதுபான கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1724 பேர்கள் இருப்பதாகவும் திருவிக நகர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும், எனவே சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பு நல்ல தகவல் தான் என்றாலும் இதே போன்ற முடிவை தமிழகம் முழுவதற்கும் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout