ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு,. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- IndiaGlitz, [Tuesday,January 31 2017]
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்பேரில் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டம் சட்ட முன்வடிவாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இந்நிலையில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை கேட்டு விலங்குகள் நல அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன
இந்த வழக்கு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் அவருடைய வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்த சட்டம் குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டட நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையைத் திரும்பப் பெறவும் அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர். இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த எந்தவித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதை அடுத்து தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.