ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர். மேலும் தமிழக அரசும் நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மற்றும் 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராஜ்ஸ்தான் உள்பட வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க ரயில்வே துறை மறுத்துவிட்டது. இதுகுறித்து ரயில்வேத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், 'சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும், கோரிக்கை வைத்தாலும் 8,500க்கும் மேற்பட்டோர் செல்லும் வகையில் உடனடியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடியாது என்றும் அறிவித்துள்ளது.
இதே ரயில்வே துறை தான் சென்னையில் இருந்து புனேவுக்கு ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்கு அம்சமான ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யும் ரயில்வே துறை, மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments