'பிகில்' படத்தில் அரசியல் உண்டா? அர்ச்சனா கல்பாதி 

  • IndiaGlitz, [Saturday,October 12 2019]

கடந்த சில ஆண்டுகளாக விஜய் படம் என்றாலே அதில் அரசியல் இல்லாமல் இருக்காது. ‘தலைவா’ படம் முதல் சமீபத்தில் வெளியான ‘சர்க்கார்’ படம் வரை விஜய் படத்தில் அரசியல் இருப்பதும், அதற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘பிகில்’ ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றே கூறப்பட்டது. இதுகுறித்து அர்ச்சனா கல்பாதி பேட்டி ஒன்றில் கூறியதாவது

எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளில் ஒன்று அரசியல் படம் எடுக்கக்கூடாது என்பதுதான். எனவே ‘பிகில்’ படத்தில் அரசியல் இருக்காது. அதேசமயம் ஸ்போர்ட்ஸ் அரசியலாக்கப்படுவது குறித்த காட்சிகள் இருக்கும்.

மேலும் பிகில் திரைப்படம் பெண்களுக்கான படம். ஒரு பெண் சமுதாயத்தில் முன்னேற சந்திக்கும் சவால்களை எப்படி முறியடிக்கின்றார் என்பது தான் இந்த படத்தின் கதை. பெண்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த படத்தை ரசிப்பார்கள்

நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை கூறிவருகிறோம். பிகில் படத்தில் நீங்கள் யாருமே எதிர்பாராதது ஒன்று இருக்கும் என்று. அந்த எதிர்பாராதது என்ன? என்பது இன்று வெளியாகும் டிரைலரில் தெரியும்.

கதை, பட்ஜெட், விஜய்யின் கால்ஷீட் என அனைத்தும் சரியாக அமைந்ததால் ‘பிகில்’ படம் எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதேபோல் அஜித்துக்கு ஏற்ற கதை, அவருடைய ஒப்புதல், நாங்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட் என அனைத்தும் சரியாக அமைந்தால் அஜித் படத்தையும் கண்டிப்பாக தயாரிப்போம்’ என்று அர்ச்சனா கல்பாதி கூறியுள்ளார்.