கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை: தமிழக அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,August 07 2018]
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மீளா சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது அரசியல் குருவான அறிஞர் அண்ணாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது. இந்த வேண்டுகோளுக்கு நல்ல பதில் கிடைக்கும் என காத்திருப்பதாக சற்றுமுன் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆனால் சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி மெரினாவில் கருணாநிதிக்கு இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மெரினாவில் தலைவர்களின் சமாதி அமைப்பது குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டச்சிக்கல் காரணமாக மெரினாவில் கருணாநிதிக்காக இடம் ஒதுக்கீடு செய்ய இயலாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு பதிலாக சர்தார் வல்லாபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம், மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.