ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை: ஈஷா மையம் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
டெல்லியில் மத வழிபாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் ஈஷா மையம் நடத்திய சிவராத்திரி கொண்டாட்டத்தில் ஏராளமான வெளிநாட்டவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதாகவும் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்றதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்தனர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் ’பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்தே எந்தெந்த கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த டேட்டா தங்களிடம் இருப்பதாகவும் அதில் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துவிட்ட டேட்டாக்களை நீக்கிவிட்டு மீதியிருக்கும் டேட்டாகளை மட்டுமே வைத்து தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இதனால் கோவை ஈஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துவிட்டது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஈஷா யோகா மையம் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஈசா யோகா மையம் தற்போது ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. ஈஷாவில் உள்ள ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்றும் இது குறித்து வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்திற்கு வருகை தந்து மருத்துவ சோதனைகள் மேற்கொண்டனர் என்றும் அப்போது யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது