கொரோனா- கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு புது கட்டுப்பாடு!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வரும் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா அதிகரித்தால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என பிரதமர் உடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்து இருக்கிறது. அந்த வகையில் இனி கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. கோயில் மண்டபங்களில் திருமணம் 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும்.

மேலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.