புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவு ஏன்? விஷால் விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,October 04 2017]
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் புதிய கேளிக்கை வரியான 10% வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. எனவே வரும் 6ஆம் தேதி வெளியாகவிருந்த சுமார் 9 சிறிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது
இந்த நிலையில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவு ஏன்? என்பது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சற்றுமுன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வரும் 6ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவு அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தே எடுக்கப்பட்டது. கேளிக்கை வரியுடன் புதிய படங்கள் வெளியானால் தயாரிப்பாளர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்படும். தற்போதைய சூழலில் 40% வரியை அரசுக்கு செலுத்தக் கூடிய நிலையில் தமிழ் சினிமா இல்லை எனவே புதிய திரைப்படங்களை வெளியிட்டு இழப்பை சந்திக்க தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. கேளிக்கை வரியை தமிழக அரசு நிச்சயமாக ரத்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.
புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது என்பதால் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் வழக்கம்போல் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனை முடியும் வரை ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.