பேருந்துகளில் இனி படங்கள், பாடல்கள் இல்லை: விஷாலுக்கு மேலும் ஒரு வெற்றி
- IndiaGlitz, [Thursday,December 07 2017]
திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை அனுமதி பெறாமல் பேருந்துகளில் ஒளிபரப்புவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக கடந்த ஆண்டு விஷால் மற்றும் அவருடைய ரசிகர்களின் முயற்சியால் இரண்டு தனியார் பேருந்துகளில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பியது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது புதிய திரைப்படங்களை பேருந்துகளில் ஒளிபரப்பியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பேருந்துகளில் திரைப்படங்கள், பாடல்களை ஒளிபரப்ப உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுசார் சொத்து உரிமை அமலாக்கப் பிரிவு (IPREC) உத்தரவிட்டது. ஆனால் பேருந்துகளில் ஒளிபரப்பும் திரைப்படங்களுக்கு உரிய உரிமை பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று தெரிவித்த பேருந்து உரிமையாளர்கள் வரும் 31ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளிலும் திரைப்படங்கள், பாடல்கள் ஒளிபரப்பப்படாது என்று உறுதி அளித்துள்ளனர்.
ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடிக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக போராடி வரும் நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் திரைப்படத்துறையை ஆரோக்கியமான பாதைக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.