இனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்!!!
- IndiaGlitz, [Monday,May 25 2020]
கொரோனா ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் வடகொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது இராணுவ பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த மாதத்தில் வடகொரியா அணுஆயுத பரிசோதனையை நடத்தியதாக செய்திகள் வெளியானது. தற்போது அமெரிக்கா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது நாட்டின் மேற்பரப்புகளில் அத்துமீறி பறக்கும் டிரோன், விமானங்கள் போன்றவற்றை சுட்டி வீழ்த்தும் லேசர் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது.
பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை, கடந்த 16 ஆம் தேதி லேசர் ஆயுதத்தைச் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறது. குறிப்பாக எந்த பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியாக வில்லை. அமெரிக்க கண்டுபிடித்து இருக்கும் புதிய தொழில் நுட்பத்தால், வானத்தின் நடுவில் பறக்கும் டிரோன்கள் மற்றும் விமானங்கள் மீது லேசர் கதிர்களை நேரடியாகச் செலுத்தி நடு வானிலேயே சுட்டு வீழ்த்த முடியும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொழில்நுட்பம் எந்த விமானத்தின் உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் ஆற்றல் உடையது. கண்ணிமைக்கும் நேரேத்தில் விமானங்கள்மீது லேசர் கதிரை செலுத்தி சுட்டு வீழ்த்தும் ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதிநவீனத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட புதிய ஆயுதம் கிட்டத்தட்ட 150 கிலோவாட் செயல் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது. திரவநிலையிலும், தன்னிச்சையாகவும் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய லேசர் ஆயுதம் அமெரிக்க வரலாற்றில் பெரும் திருப்பமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நியூயார்க் கடற்படை அதிகாரிகள் இதுகுறித்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளனர். இந்த பரிசோதனை குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Solid State Laser System Demonstrator எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இதற்கு முன்பே லேசர் ஆயுதங்கள் இருந்தாலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள புதிய லெசர் தொழில்நுட்பம் அதிக வலிமை கொண்டது எனவும் கூறப்படுகிறது. கடந்த 2017 இல் அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் திறன் கொண்ட 30 கிலோவாட் லேசர் தொழில் நுட்பத்தை சோதனை செய்து பாத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நடத்தி இருக்கும் புதிய லேசர் தொழில்நுட்பச் சோதனைக்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதாகவும் தற்போது சந்தேகம் எழுப்பப் படுகின்றன. கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்னாலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கடுமையான டிரேட் வார் இருந்து வந்தது. அதைத்தவிர தென் சீனக்கடல் பகுதியைக் குறித்து சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் தொடர்ந்து பூசல் இருந்து வருகிறது. தற்போது கொரோனா ஏற்படுத்தி இருக்கும் கடுமையான சச்சரவுகளுக்கு நடுவில் புதிய லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா சோதனை செய்து பார்த்திருக்கிறது. இந்த காரணங்களை வைத்துப் பார்க்கும்போது அமெரிக்கா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் வல்லரசு நாடுகளுக்கு இடையில் புதிய போர் வருவதற்கான அறிகுறிகளுள் இதுவும் ஒன்று எனவும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.