சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்குமா? முதல்வர் பழனிசாமி பேட்டி
- IndiaGlitz, [Saturday,June 20 2020]
சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதை அடுத்து முழு ஊரடங்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் முதல்வர் பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றாலும், தமிழக அரசு கொரோனாவை தடுக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்றும் நோய் பரவுதலை தடுக்கவே ஊரடங்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் உள்பட பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருவதாகவும் நம்முடைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தீவிர முயற்சியால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் குறை கூறி வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர், கொரோனா வைரஸ் என்பது இதுவரை யாரும் சந்திக்காத ஒரு பிரச்சனை என்பதால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல்படி அரசு செயல்பட்டு வருவதாகவும், அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது பொருத்தமானது அல்ல என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.