எந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்...! சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசிய அரசியல் பாதை....!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு அவர்களின் சுவாரசியமான அரசியல் வாழ்க்கை, அவர் அரசியலில் கால் தடம் பதித்தது எப்படி என்பதை பார்க்கலாம்.
அரசியல் துவக்கம்....
தன்னுடைய 69 வயதிலும் தளராமல் அரசியலில் ஜொலித்து வரும் அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கை 1996-இல் துவங்கியது. அந்த வருடத்தில் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சியை நிறுவினர். அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அப்பாவு அவர்கள், அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் தொகுதியில் நின்று எம்எல்ஏ-வாக வெற்றி வாகை சூடினார்.
இதைத்தொடர்ந்து 2001 சட்டமன்ற தேர்தலிலும், அத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால் அச்சமயத்தில் அதிமுக-தமாக கூட்டணி வேறு கட்சிக்கு வாய்ப்பளித்துவிட்டது. இதனால் கொந்தளித்த அவர் சுயேட்சையாக போட்டியிட்டு அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் கண்டார். தன்னிச்சையாக போட்டியிட்டாலும், வெற்றி பெரும் அளவிற்கு மிகுந்த செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்து வந்தார். பொதுமக்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் விதமாக, அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார்.
தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை தடுக்க கடுமையான அளவில் குரல் கொடுத்து வந்தார். விவசாயிகள் குறித்த பிரச்சனைகளிலும் முன் நின்று போராடி வந்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த சமயத்திலும் அதிமுக கட்சிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார். அவரது தொகுதியில் அதிமுக பிரமுகர்கள் பலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை எதிர்த்த அப்பாவு-விற்கும், கட்சி தலைமைக்கும் தீவிர பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பாய்ந்த வண்ணம் இருந்தன. இதனால் அதிருப்தி அடைந்த அப்பாவு 2006-ஆம் ஆண்டில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பாக களமிறங்கி வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து 2016-இல் அதே தொகுதியில் திமுக சார்பாக, அதிமுக வேட்பாளர் இன்பத்துரையை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் மிகவும் குறைந்த பட்ச வாக்குகள்(49) பெற்று இன்பத்துரை வெற்றிபெற்றார். தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், இன்பதுரையை 150 வாக்குகள் அதிகம் நான் தான் பெற்றேன்" என அப்பாவு அவர்களும், அவரின் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர். தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு அவர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அத்தொகுதியில் மறுவாக்கு நடக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக இன்பத்துரை உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்ததால், இதுவரையும் முடிவுகள் வராமல் இழுபறியாகவே இருந்து வந்தது.
இந்தநிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், திமுக சார்பாக போட்டியிட்ட அப்பாவு அவர்கள் 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போது தமிழக சட்டமன்றத்தில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வாகியுள்ளார்.
தொடர்ந்து 4 முறை திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் தொகுதியில் வெற்றிக்கனியை சுவைத்து வந்த அப்பாவு அவர்கள், 16-வது தமிழக அரசின் திமுக சார்பில் சபாநாயகராகியுள்ளார். கட்சிக்காகவும், தொடர் போராட்டங்களுக்காகவும், மக்களின் நன்மைக்காவும், வழக்குகளுக்காகவும் ஓடித்தேய்ந்த அப்பாவு அவர்கள், இனிமேல் சட்டசபையில் அமர்ந்து நடவடிக்கைகளுக்கு தீர்ப்பு கூறட்டும் என பல அரசியல் விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள். மக்களுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அப்பாவு அவர்கள் சபாநாயகராக எப்படி சிறப்பாக பணியாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout