ஒருநாள் கூட லீவு எடுக்காமல் வேலை… 74 வருட சாதனையைக் கொண்டாடிய பெண்மணி!
- IndiaGlitz, [Saturday,July 08 2023]
அமெரிக்காவில் வசித்துவரும் மூதாட்டி ஒருவர் 74 வருடங்களாக ஒரே விற்பனை நிலையத்தில் வேலை செய்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் தற்போது 90 வயதில் ஓய்வு பெற்றிருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்தவர் மெல்பா மாபென். இவர் தன்னுடைய 17 வயதில் டைலர் டில்லார்டின் எனும் பல்பொருள் விற்பனை அங்காடி நிலையத்தில் லிஃப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிய துவங்கியுள்ளார். 1949 இல் துவங்கிய இந்த பணி கடந்த 1956 இல் அதே கடையில் ஆண்களுக்கான ஆடை அழகு சாதனங்களை விற்கும் பணியாக மாறியிருக்கிறது.
இப்படி மெல்பா தனது 17 வயதில் துவங்கிய வேலையை ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் கடந்த 74 வருடங்களாக செய்துள்ளார். அதுவும் உடல்நிலை காரணங்களுக்காக கூட அவர் விடுப்பு எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது 90 வயதை எட்டியிருக்கும் மெல்பாவிற்கு அந்த விற்பனை நிலையமே ஓய்வு கொடுத்து அவரை கவுரப்படுத்தும் விதமாக ஓய்விற்காக விழாவினை எடுத்திருக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பலரும் ஒரு பெண்மணி 74 வருடங்களாக வேலை செய்வதே பெரிய ஆச்சர்யம். இதில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் தனது உழைப்பின் மீது அக்கறையோடு இருந்துள்ளார் என்று அவரைப் பாராட்டியுள்ளனர்.
மேலும் இவரது அரிய சேவையைக் குறித்து பாராட்டி பேசிய அந்த விற்பனையகத்தின் மேலாளர் உள்ளிட்ட பலரும் அவரை ஒரு விற்பனை அதிகாரியாக நாங்கள் பார்த்ததே இல்லை. வேலையில் அக்கறையோடு எங்களுக்கு ஆதரவாக ஒரு தாய் போன்று நடந்து கொண்டிருந்தார். அவர் 90 வயதை எட்டியதை அடுத்து ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது 74 வருட பணியை விட்டு ஓய்வு பெற்றிருக்கும் மெல்பா இனி தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பிடித்த உணவுகளை சாப்பிடப் போவதாகக் கூறியிருக்கும் தகவல் பலரையும் மெய்ச்சிலிர்க்க வைத்துள்ளது.