ஜிஎஸ்டி வரியில் இருந்து தப்பியது திருப்பதி லட்டு

  • IndiaGlitz, [Monday,June 19 2017]

இந்தியா முழுவதும் ஒரே வரிமுறை என்ற முறையில் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதை இந்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களும் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுவரை சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானத்துக்கும் ஜிஎஸ்டி வரி பொருந்தும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருப்பதியிலுள்ள தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலை உயரும் என்றும் குறிப்பாக, 1 லட்டு தயார் செய்ய 35 ரூபாய் செலவாகும் நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பிரசாதங்கள் தயார் செய்யப்படும் பொருள்கள்மீது கூடுதலாக 6 சதவிகித வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதன் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆந்திர நிதியமைச்சர் எனபலா ராமகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தங்கும் அறையின் வாடகை ரூ.1000க்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்டு மட்டுமின்றி முடிகாணிக்கைகள் விற்பனை செய்யப்படுவதற்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.