ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மின்சார கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிரடியாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில் ‘தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் வசூலிக்க தமிழக மின்சார வாரியத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை அதாவது மே 18ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை என்றும், மே 18 வரை மின்கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்கக் கூடாது' என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு மாதங்கள் வீட்டு வாடகை வசூல் செய்யக்கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் வீட்டு வாடகையை வசூல் செய்து கொண்டுதான் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணம் வசூலிக்க தடை என்ற அறிவிப்பு தமிழக மக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.