பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,July 11 2017]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியவுடன் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய நேற்று சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது.
இந்த நேர்காணலில் ரவிசாஸ்திரி, சேவாக் உள்பட ஐந்து பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்திக்கு பிசிசிஐ தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'புதிய பயிற்சியாளர் குறித்து 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இதுகுறித்து கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்று முடிவெடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமிதாப் சவுத்ரி கூறினார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியபோது, பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஆலோசித்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.