முதல் முறையாக நேற்று சீனாவில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை!!!
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
கொரோனா நோய்த்தொற்று கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலக சுகாதார மையத்தால் உறுதிசெய்யப்பட்டது. சீனாவில் வூஹாண் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 10 தேதி பரவத்தொடங்கியதாகக் கருதப்படும் இந்த வைரஸ் 3 மாதங்களில் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பாதிக்காத உலக நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றஅளவிற்கு தற்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தனது முதல் பயணத்தைத் தொடங்கிய சீனாவில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது சீனாவில் நிலைமைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
நேற்று சீனாவில் கொரோனா பாதிப்பினால் எந்த உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று அந்நாட்டி தேசிய சுகாதா ஆணையம் செய்திவெளியிட்டு இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றினால் இதுவரை சீனாவில் 3331 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. ஆனால் சீனா இன்னொரு விதத்தில் தற்போது சிக்கலை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூரில் கொரோனா பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்தவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வந்த 32 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. சொந்த மக்களிடம் பரவலைத் தடுத்துவிட்ட நிம்மதியில் இருக்கும் சீனா தற்போது வெளிநாட்டு பயணிகளை சமாளிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. சீனாவில் வுகாண் மாநிலம் தற்போது இயல்புநிலைமைக்கு திரும்பி, இறைச்சி சந்தைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அந்தச் சந்தைகளில் பழையபடி அனைத்து இறைச்சிகளும் விற்கப்பட்டு வரும் நிலையில் சிலர் தங்களது அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
வௌவாலில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மைக்கொண்ட கொரோனா வைரஸ் நேரடியாக மக்களை தாக்கி நோயை ஏற்படுத்துவதில்லை என ஆய்வு முடிவுகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த வைரஸ் எறும்புத்திண்ணிகளில் இருப்பதைப் போன்ற தன்மையைக் கொண்டிருக்கின்றன என்றும் இந்த வைரஸ் நேரடியாக மக்களிடம் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவி புதிதாக மனித உடலுக்குள் பரிணாமம் பெற்றவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், மக்கள் இறைச்சிகள் கடைகள் தற்போது தேவையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் சீனா அரசு மக்களுக்கு பயத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இறைச்சிகடைகளில் காணப்பட்ட தடைகளை நீக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 74 ஆயிரத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கும்போது . சீனாவில் முதல் முறையாக நேற்று எந்த உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை என்பது மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விடவைத்திருக்கிறது.