9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை: கொரோனாவை விரட்டி அடிக்கும் சென்னை

சென்னையில் கடந்த மாதம் வரை தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமார் 1000 பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையின் 15 மண்டலங்களிலும் அதிக அளவு கட்டுப்பாட்டு பகுதிகள் கடந்த மாதம் வரை இருந்த நிலையில் தற்போது 6 மண்டலங்களில் மட்டுமே ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்பதும் ராயபுரம் உள்ளிட்ட ஒன்பது மண்டலங்களில் ஒரு கொரோனா கட்டுப்பாட்டு பகுதி கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து தீவிரமாக எடுத்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகியவர்களின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தற்போது ராயபுரம் உள்ளிட்ட 9 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதி கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது மொத்தமே 57 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே உள்ளன என்பதும் அதில் அண்ணாநகரில் 18 பகுதிகளும், கோடம்பாக்கத்தில் 18 பகுதிகளும், அம்பத்தூரில் 16 பகுதியிலும், தேனாம்பேட்டையில் மூன்று பகுதிகளும், வளசரவாக்கம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தலா ஒரு கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த மாதம் வரை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் சென்னையை விட்டு பயந்து பலர் சொந்த மாவட்டத்துக்கு சென்றனர். ஆனால் தற்போது சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் மீண்டும் சென்னைக்கு திரும்ப அவர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.